16/10/2022
பாதி வாழ்நாளை வழங்க முன்வந்த
பாட்டாளி இணையர்: இவர்களைப்
போன்றவர்களால் தான் என் ஆயுள் கூடுகிறது!
தைலாபுரம் தோட்டத்தில் இன்று என்னை சந்திக்க வந்த பார்வையாளர்களில் இருவர் வெளிநாட்டில் வாழும் இணையர்.
அவர்கள் பெயர் இராஜகுமார் கோவிந்தசாமி - வனிதா இராமலிங்கம்.
அவர்களில் இராஜகுமார் கோவிந்தசாமி அரியலூர் மாவட்டம் கோப்பியன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த, வால்மார்ட் நிறுவனத்திற்கு இணையான பன்னாட்டு சில்லரை வணிக சங்கிலித் தொடர் நிறுவனமான TJ MAXX நிறுவனத்தின் ஐரோப்பிய கிளை இலண்டன் வாட்போர்ட்டில் செயல்பட்டு வருகிறது.
அந்த நிறுவனத்தின் ஐரோப்பா ஈகாமர்ஸ் சர்வீஸஸ் மேலாளராக இராஜகுமார் கோவிந்தசாமி பணியாற்றி வருகிறார். அவரது மனைவி வனிதாவும் லண்டனில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் உள்ளார்.
இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தமிழ்நாடு வந்த அவர்கள் என்னை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு விரைவில் பெண் தெய்வம் பிறக்கும் என்று வாழ்த்தினேன்.
அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமமான கோப்பியங்குடிகாட்டில் பிறந்து லண்டனில் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்கும் இராஜகுமாரையும் அவரது மனைவியையும் வாழ்த்தினேன்.
அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட இராஜகுமார்,’’ அய்யா... இன்று நாங்கள் இந்த உயரத்தில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் போராடி பெற்றுக் கொடுத்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் தான் நான் படித்து பொறியாளர் ஆனேன். எனது மனைவியும் அப்படித்தான் படித்து பொறியியல் பட்டம் பெற்றார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது அய்யா. ஆனால், எங்களுக்கு நீங்கள் தான் கடவுள் அய்யா. நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் அய்யா. அதற்காக எங்கள் இருவரின் வாழ்நாளில் பாதியை உங்களுக்கு தருவதற்கு தயாராக இருக்கிறோம் அய்யா” என்று கூறினார்.
பாட்டாளி குடும்பத்தில் பிறந்த அவர்கள் இப்போது எட்டியிருக்கும் உயரத்தை கண்டு பெருமையடைகிறேன்.
வசதியான, மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ள அவர்கள் தங்களின் வாழ்நாளில் பாதியை எனக்கு வழங்க முன்வந்ததை நினைத்து நெகிழ்ந்து போகிறேன்.
இவர்கள் மட்டுமல்ல... இன்னும் லட்சக்கணக்கான பாட்டாளிகள் என் மீது வைத்துள்ள பாசமும், பக்தியும் அளப்பறியது.
அவர்களால் தான் எனது வாழ்நாள் கூடுகிறது!