Vivasayam Tamilnadu

Vivasayam Tamilnadu Any clarification kindly send mail to this id "[email protected]"

மீன் வளர்ப்பு:தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - ...
12/11/2014

மீன் வளர்ப்பு:

தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!
இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் இவர்களுடைய மீன் பண்ணையில் ஆஜரானோம். பரபரப்பாக மீன் விற்பனையிலிருந்தவர்களிடம் நாம், அறிமுகப்படுத்திக் கொள்ள... மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினர்.
''மொத்தம் எட்டரை ஏக்கர் நிலமிருக்கு. தென்னைதான் முக்கிய விவசாயம். வேளாண்மைப் பொறியியல் துறையைச் சேர்ந்தவங்க எங்க தோட்டத்துக்கு வந்து... 'தோட்டத்துல பண்ணைக்குட்டை வெட்டி, மீன் வளர்த்தா நல்ல வருமானம் கிடைக்கும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். நாங்களே குட்டை எடுத்துத் தர்றோம்’னு சொன்னாங்க. நாங்க தலையாட்டினதும்... 40 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்துல பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் குன்றக்குடி கே.வி.கே. மூலமா மீன் வளர்ப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, மீன் வளர்க்க ஆரம்பிச்சுட்டோம்.

ஆரம்பத்துல குட்டையில தண்ணியை நிரப்பினதும், தண்ணிய மண்ணு உறிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. குளத்துக்கரம்பை மண்ணைக் கொண்டு வந்து ஒரு அடி உயரத்துக்கு மெத்தினோம். அப்பறம்தான் தண்ணி நிலைச்சு நின்னுது. இப்ப ரெண்டு வருஷமா மீன் வளர்த்துக்கிட்டிருக்கோம். தீவனம் கொடுக்கறதைத் தவிர வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. குளத்துல தண்ணி மட்டம் குறைஞ்சுடாமப் பாத்துக்கணும். மீனுங்க களவு போகாம பாத்துக்கணும், அவ்வளவுதான்'' என்று சண்முகசுந்தரி ஆரம்ப கதையைச் சொல்ல, அவரைத் தொடர்ந்தார், கணேசன்.
சராசரி 1,200 கிலோ!
'எந்தப் பிக்கல், பிடுங்கலும் இல்லாத அமைதியான, அதேநேரத்துல நல்ல வருமானமும் கொடுக்குற வேலை இது. போன ஆகஸ்ட் மாசம், 350 கெளுத்தி, 500 ரோகு, 500 கட்லா, 300 சில்வர் கெண்டை, 350 புல் கெண்டைனு மொத்தம் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டிருந்தோம். மீன் தீவனத்தை கடைகள்ல வாங்கி போட்டோம். இப்போ ஒன்பது மாசம் ஆகுது. ஒவ்வொரு மீனும் கிட்டத்தட்ட முக்கால் கிலோ எடை வந்துருச்சு. 2 ஆயிரத்துல...
200 செத்திருந்தாலும் 1,800 மீன் வரைக்கும் தேறிடும். எப்படியும் எடை கணக்குல பார்த்தா... மொத்தமா 1,200 கிலோவுக்கு குறையாது. இப்போதான் பிடிச்சு விக்க ஆரம்பிச்சுருக்கோம்.

விற்பனைக்காக நாங்க எங்கயும் அலையறதில்ல. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் பண்ணையிலயே நேரடி விற்பனை மூலமா எல்லாம் முடிஞ்சுடுது. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க தேடி வந்து வாங்கிக்குறாங்க. தேவையான அளவுக்கு அப்பப்போ பிடிச்சுக்குறோம். ஒரு கிலோ மீன் 80 ரூபாய்னு விக்குறோம். இதுவரை முன்னூறு கிலோ வித்துருக்கோம். மொத்தமா, 1,200 கிலோ மீன் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டா... 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் போனாலும்... மீதி 66 ஆயிரம் ரூபாய் லாபம். எங்களைப் பொறுத்தவரை ஏக்கர் கணக்குல விவசாயமெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்த மாதிரி ரெண்டு குளம் இருந்தாலே... எந்தப்பாடும் இல்லாம ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு நிறைவா சம்பாதிச்சுட முடியும்'' என்று முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரச் சொன்னார்.
விளையாத மண்ணுக்கு விரால்..! தொழில்
சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.இ. வரதராஜன், தனது தோட்டத்தில் மண்வளம் சரியாக இல்லாததால்... மீன் வளர்த்து வருகிறார். தனது மீன் வளர்ப்பு அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது, ''மொத்தம் 10 ஏக்கர் நிலமிருக்கு. அந்தக் காலத்து வட்டக் கிணறு எப்பவும் தண்ணி குறையாது. நல்ல தண்ணி வசதியிருந்தும், மண்ணு சரியில்லை. கிட்டத்தட்ட எந்தப் பயிரும் வராத ஈழக்களிமண் பூமி. ஓரளவு மண்ணு சுமாரா இருக்கற 6 ஏக்கர் நிலத்துல தென்னையை நட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். குன்றக்குடி கே.வி.கே. ஆலோசனைப்படி சும்மா இருந்த இடத்துல இப்பத்தான் மீன் வளக்க ஆரம்பிச்சிருக்கேன்.

90 அடி நீளம், 35 அடி அகலம்ங்கிற கணக்குல 6 குளங்களை வெட்டியிருக்கேன். ரெண்டு குளத்துல விரால் வளர்க்க முடிவு பண்ணினேன். அதுக்காக நாலு மாசத்துக்கு முன்ன ஒரு குளத்துக்கு
400 ஜிலேபி கெண்டைனு ரெண்டு குளத்துலயும் விட்டேன். அதுக ஓரளவு வளந்துடுச்சு. போன மாசம், குளத்துக்கு 400 விரால் குஞ்சுனு ரெண்டு குளத்துலயும் 800 குஞ்சுகளை விட்டுருக்கேன். ஜிலேபி கெண்டை மீன், தன்னோட முட்டைகளை வாயிலயே அடைகாத்து, 18 முதல் 21 நாள் இடைவெளியில குஞ்சுகளா துப்பிக்கிட்டே இருக்கும். இந்த ஜிலேபி குஞ்சுகளை சாப்பிட்டே விரால் வளர்ந்துடும். இன்னும் 8 மாசம் கழிச்சுதான் எவ்வளவு விரால் கிடைக்கும்னு தெரியும்.
அந்த ரெண்டு குளம் போக, மத்த நாலு குளத்துலயும் மிர்கால், கட்லா, ரோகு மீன்களை ஒவ்வொரு குளத்துக்கும் 400 குஞ்சுகள்ன்ற கணக்குல விட்டுருக்கேன். தினமும் ஒரு மணி நேரம் தீவனம் வெச்சு, குளங்களை ஒரு சுத்து சுற்றி வருவேன். அவ்வளவுதான், வேற எந்த ஜோலியும் இல்லை. ஒவ்வொரு குளத்துக்கும் தினமும் ஒரு கிலோ தவிடு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ சாணம் போடுறேன். கே.வி.கே. யிலிருந்து குருணைத் தீவனம் கொடுத்திருக்காங்க. டேஸ்டுக்காக அப்பப்ப அதையும் கொஞ்சம் சேத்துக்குவேன்.
கிலோ 250 ரூபாய்!

இப்ப வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளந்துட்டு வருது. விரால் மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கு. கிலோ 250 ரூபாய்க்கு வாங்குறாங்க. நான் குளத்துல விட்டிருக்குற 800 குஞ்சுகள்ல... இழப்பு போக, 300 கிலோ கிடைச்சாலும்... 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மத்த குளங்கள்ல கிடைக்குற வருமானம்... செலவு கணக்குல போனாலும்... விரால் மூலமா வர்ற வருமானம் மொத்தமும் லாபமா கிடைச்சுடும். எதுக்கும் உதவாத மண்ணை வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியலையேனு கஷ்டப்பட்ட எனக்கு... இப்படி வழி காட்டிய குன்றக்குடி கே.வி.கே.க்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்கிறார் வரதராஜன்.
இப்படித்தான் அமைக்கணும் குளம்!
குன்றக்குடியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்). மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சிகளோடு, தொடர் ஆலோசனைகளையும் கொடுத்து வருவது, இப்பகுதியில் மீன் வளர்ப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. இங்கே, அனைவருக்கும் பயன்படும் வகையில், இம்மையத்தின் விஞ்ஞானி கணேசன், மீன் வளர்ப்பு முறைகளைப் பற்றி விளக்குகிறார்.
செவ்வக வடிவில் குளம்!
''ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
கரை... கவனம்!

குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.
பச்சை நிறமே... பச்சை நிறமே!
அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.
தாவர மிதவைகள்... கவனம்!
தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.
காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.
மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.
பகுதிக்கேற்ற மீன் ரகங்கள்!
சரியான அளவில் தாவர மிதவைகள் உற்பத்தியான பிறகுதான் மீன் குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். ஒரு ஏக்கர் குளத்தில், அதிகபட்சமாக 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். மீன்குஞ்சுகளை விடும் முன்பாக, நமது பகுதியில் விற்பனை வாய்ப்பு, குளத்தின் அளவு, தண்ணீர் வசதி போன்றவற்றை வைத்து, வளர்க்க இருக்கும் ரகங்களை முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக நமது பகுதியில், கெண்டை வகைகள், விரால், கெளுத்தி என்ற தேளி ஆகிய ரகங்கள்தான் வணிகரீதியாக லாபகரமாக இருக்கின்றன. பத்து மாதங்கள் வரை தொடர்ந்து குளத்தில் நீர் நிறுத்தும் வசதி இருந்தால், கெண்டை மீன்களையும்; ஆறு மாதங்கள் வரை நீர் நிறுத்தும் வசதி இருந்தால் கெளுத்தி மீன்களையும்; நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீர் நிறுத்தும் வசதி இருக்கும்பட்சத்தில், ஜிலேபி கெண்டை மீன்களையும் வளர்க்கலாம்.
குஞ்சுகளுக்கு 50 நாள் வயது!
குஞ்சுகளை முடிவு செய்த உடன், 35 முதல் 50 நாட்கள் வயதுள்ள தரமானக் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட வேண்டும். இந்த வயதில் குஞ்சுகள் விரல் அளவுக்கு வளர்ந்திருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் 50 காசு முதல் 3 ரூபாய் 50 காசு வரை ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. குளத்தின் அளவுக்கேற்ற எண்ணிக்கையில்தான் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.

கெண்டை ரகங்களுக்கு ஒரு மீனுக்கு ஒரு சதுர அடி இடம் தேவை. ஒரு சதுர அடியில் 3 முதல் 4 கெளுத்தி மீன்களை வளர்க்கலாம். 25% கட்லா, 15% ரோகு, 20% மிர்கால்,
10% வெள்ளிக்கெண்டை, 10% புல் கெண்டை, சாதா கெண்டை 20% என்ற கணக்கில் கெண்டை மீன் ரகங்களைக் கலந்து வளர்க்கலாம்.
வழக்கத்தை மாற்றக்கூடாது!
மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.
இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ... கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும். கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும். மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்' என்ற கணேசன் நிறைவாக,
நோய்கள் தாக்காது!
கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.
மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால்... இந்நோய் எட்டியே பார்க்காது. அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின் திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்'' என்றார்.
ஆறு ரகங்களும் இருக்க வேண்டும்!
கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன. இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.
தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள். கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை. இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.
நாமளே தயாரிக்கலாம்...குருணைத் தீவனம்!
ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: சோயாபீன்ஸ் மாவு-210 கிராம், கருவாட்டுத்தூள்-203 கிராம், இறால் கருவாட்டுத்தூள்-200 கிராம், சோளமாவு-173 கிராம், கோதுமை மாவு-200 கிராம், உப்பு-4 கிராம், வைட்டமின் பொடி-7 கிராம். இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்து விடும்.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு... கலந்து வைத்துக் கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி 5 நிமிடம் கிளறி, குக்கரில்
5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகி விடும். அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
தேளிக்குத் தடையில்லை! tholil
தேளி மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி பேசிய கணேசன், ''தேளியைத் தடை பண்ணிட்டதா பல பேரு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. 'ஆஃப்ரிக்கன் கேட் ஃபிஷ்’னு ஒரு ரக தேளி மீன் இருக்கு. இதோட முள் அதிக விஷத்தன்மை கொண்டது. அதனால் இந்த ரகத்துக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கெளுத்தி வகையைச் சேர்ந்த தேளிகளுக்குத் தடையில்லை. இவற்றுக்கு அதிக இட வசதி தேவையில்லை என்பதால், தொட்டிகளில்கூட வளர்க்க முடியும். இது சுவை குறைந்து இருப்பதால், அதிக விலைக்கு விற்பனையாவதில்லை'' என்றார்.

காளன் வளர்ப்பு - செய்முறை விளக்கம் - படங்களுடன்காளான் வளர்ப்பு பயிற்சி siru tholil suya tholil suya thozhil ideas in tam...
12/11/2014

காளன் வளர்ப்பு - செய்முறை விளக்கம் - படங்களுடன்

காளான் வளர்ப்பு பயிற்சி siru tholil suya tholil suya thozhil ideas in tamil

காளான் விதை கிடைக்கும் இடம்

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..

நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்!!!  எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில்  நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக நட...
04/11/2014

நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்!!!

எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வரும் நண்பரிடம் சேகரித்த தவல்களை இங்கே உங்களிடம் பகிந்துகொள்கிறேன்.நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் (பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன் மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது.திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய

ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்
------------------------------
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள்,கோழி தீவனம் ,காய்கள் மற்றும் கலைஞர் அரிசி போன்றவகைகள் வழங்க படுகிறது.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை
-------------------
குஞ்சுகள் வளந்த 80 மற்றும் 90 நாட்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.வியாபாரிகள் பொதுவாக கிலோ 140 முதல் 155 வரை கிலோவுக்கு கொடுப்பதாகவும் இவர் கூறுகிறார்.

ப்ராய்லர் கோழி வளர்ப்பில் லாபம் பார்ப்பது என்பதும் இன்றைய சுழலில் பெரும் சவாலாகவே உள்ளது. தெரிந்த நண்பர் ஒருவர் ஏழு லட்சம் ருபாய் செலவு செய்து கொட்டகை அமைத்து ப்ராய்லர் கோழி வளர்த்து வந்தார் இப்பொழுது சுகுணா பாம்ஸ் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே குஞ்சுகள் தருகிறார்கள்(சில வியாபார நோக்கத்திற்காக),வருடத்திற்கு ஆறு மாதங்கள் அவரது கொட்டகை காலியாகவே உள்ளது.அவர் இப்போது மொத்த முதலிட்டின் வட்டிக்கு தான் லாபம் வருகிறது என்று புலம்பி திரிகிறார்.ப்ராய்லர் கோழி வளர்ப்பு என்பது சுகுணா போன்ற நிறுவனங்களின் மொத்த கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இது போன்று நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவை எவரையும் நம்பாமல் நாமே தொழில் செய்து செழிக்க நல்ல வழி என்று நண்பர் கூறுகிறார்.

ஈமு கோழி வளர்ப்புஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவ...
02/11/2014

ஈமு கோழி வளர்ப்பு

ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.

ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்:

தோற்றம்
ஆஸ்திரேலியா
குடும்பம்
ராட்டைட்
பயன்கள்
எண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள்
வாழ்நாள்
30 வருடங்கள்
பொரிக்கும் போது குஞ்சின் எடை
400-450 கி
முதிர்ந்த கோழியின் உடல் எடை
50-70 கிகி
உயரம்
5-6 அடி
பருவமடையும்
வயது
18-24 மாதங்கள்
விற்பனை
வயது
15-18 மாதங்கள்
பாலின விகிதம்
1:1
ஓடும் வேகம்
60 கிமீ / மணிக்கு
ஆண்டொன்றிற்கு ஒரு கோழி இடும்
முட்டைகள்
50 முட்டைகள்
இனச்சேர்க்கை
வயது
2-40 வருடங்கள்
அடைகாக்கும் காலம்
50-54 நாட்கள்
முட்டையின் எடை
680 கிராம்
இடஅளவு
ஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு 100×25
அடி
ஈமு கோழியைப் பிடிப்பதற்கு
தோலினால் ஆன கையுறை

இன வேறுபாடு கண்டறிதல்
பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும்.
எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும்.
பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆண் பறவைகள் பன்றியினைப் போல் உறுமும்.

போக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்:

ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும். எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்ட பறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.

அதற்கு

ஈமு பறவை வளர்ப்பாளரிடம் சென்று அதைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அவருடன் கூடவே இருந்து சற்று பயிற்சி பெற்று வருதல் நலம்.
ஈமுக்கள் கொட்டிலில் வளர்க்கப்படும்போது அதிக வெயிலினால் கன அழுத்தத்திற்கு உட்பட நேரிடலாம். எனவே முடிந்தவரை குளிர்ந்த இரவு நேரங்களிலேயே இவற்றைப் பிடிக்கவேண்டும். அடிக்கடி துரத்திப் பிடித்தல் கூடாது. சரியாகத் திட்டமிட்டுப் பிடிக்கவேண்டும். ஈமுக்கள் அமைதியற்றுக் காணப்பட்டால் சிறிது ஓய்வு கொடுத்துப் பின் மறுநாள் பிடித்தல் வேண்டும்.
ஈமு பறவைகள் சாதுவானவை. எனினும் அவற்றை கால்நடைகளைப் போல கையாள்வது எளிதல்ல. அதிலும் சற்று வயது முதிர்ந்த பறவைகளை கையாளுதல் மிகவும் கடினம்.

ஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவு. எனவே அவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே.

ஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.
ஈமு கோழிகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகப் பிடித்து வளர்க்கவேண்டும்.

பாலினம் கண்டறிதல்
அடையாளச் சீட்டு, கால் வளையம் மற்றும் மின்சார முறையில் அடையாளக் குறியிடுதல்.
சிகிச்சைகள்
மருந்தளித்தல்
ஒட்டுண்ணிகள் தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல்
சிறிய ஊசிகள் (அ) அறுவை சிகிச்சை செய்தல்

முயல் வளர்ப்புமுயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச...
31/10/2014

முயல் வளர்ப்பு

முயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு.

இனங்கள்

இனங்கள் விளக்கம்:

சோவியத்சின்செல்லா :

இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் எடை 4.5-5 கிலோகிராம் வரை இருக்கும். இது அதிகம் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் ரோமங்கள் கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
சாம்பல் நிற ஜெயிண்ட் :

இதுவும் சோவியத் குடியரசு நாடுகளைச் சேர்ந்த இனம், எடை 4.5-5 கிலோ வரை இதன் ரோமம் அடர்த்தியாகக் குழியுடன் காணப்படுவதால் இது ‘குழிமுயல்’ எனத் தவறாகக் கருதப்படுகிறது. இது உரோமம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.

நியூசிலாந்து வெள்ளை:

இவ்வினம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. உரோமங்கள் வெள்ளை நிறம், தோல் நிறமற்றது. மெலனின் நிறமி இல்லாததால் கண்ணின் நிறம் சிவப்பாக இருக்கும். 4-5 கிலோ எடையுடன் இது இறைச்சி மற்றும் உரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது.

வெள்ளை நிற ஜெயிண்ட் :

இதுவும் சோவியத் குடியரசின் இனம் ஆகும். இது தோற்றத்தில் நியூசிலாந்து வெள்ளை போன்றே இருக்கும். உரோமம் வெள்ளை நிறத்துடனும், தோலும் கண்களும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஆனால் உடல் சற்று நீளமாகக் காணப்படும்.
அங்கோரா 3 கிலோ மட்டுமே எடைகொண்ட பழங்காலத்திலிருந்து வளர்க்கப்படும் சிறிய இனம் ஆகும். கம்பளி தயாரிக்க உதவும் வெள்ளை நிற உரோமங்களுடன் கூடியது. ஒரு வருடத்திற்கு 3-4 முறை உரோமம் கத்தரிக்கலாம். 300-1000 கிராம் அளவு உரோமம் கிடைக்கும்.
கலப்பு இனங்கள் மேலே கூறப்பட்ட அயல்நாட்டு இனங்களுடன் உள்ளூர் இனங்கள் கலப்பு செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாகின்றன. கேரள தட்பவெப்பநிலைக்கு இவ்வினம் மிகவும் ஏற்றது. எடை 4-4.5 கிலோ இருக்கும். உரோமங்களின் நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடும்.

சோவியத் சின்செல்லா:
அங்கோரா
சாம்பல் நிற ஜெயிண்ட்
வீட்டமைப்பு மற்றும் இடவசதி

சரியான வெளிச்சத்துடன் காற்றும், நல்ல இடவசதியும் கொண்ட கொட்டகை / வீட்டமைப்பு முறை முயல் வளர்ப்பிற்கு மிகவும் அவசியம் சரியான கூண்டுகள் அல்லது மரத்தால் அமைக்கப்பட்ட பெட்டியமைப்புகளில் குடிநீர், தீவன வசதிகள் முறையாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். முயல்கள் ஓடிவிடாமல் இருக்க சுற்றுப்புற அமைப்பு கொண்ட வீட்டமைப்பு அவசியம். வளர்க்கும் இடம், தட்பவெப்பநிலை, பொருளாதார வசதியைப் பொறுத்து பல முறைகள் முயல் வளர்ப்பில் பின்பற்றப்படுகின்றன. மூங்கில்கள், பழைய பெட்டிகள், மரத்துண்டுகள், செங்கற்கள், ஏஸ்பெஸ்டாஸ் சீட்டுக்கள் மற்றும் கட்ச் தரைகள், சுவர்கள் போன்றவை பொதுவாக உபயோகிக்கும் பொருட்கள்.
ஒளி (வெளிச்சம்)

முயல்களின் இனப்பெருக்கத்தில் ஒளியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை அல்லது செயற்கை ஒளி முயல்களுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும். ஒரு ஆண் முயல் (இனக்கலப்பிற்குப் பயன்படுத்தப்படுவது) 8-12 மணி நேரம் ஒளி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதன் உயிரணுக்கள் நல்ல ஓட்டத்துடன் இருக்கும். அதே போல் சினைத் தருணத்தில் இருக்கும் பெண் முயலானது குறைந்தது 6 மணி நேரத்திற்காவது வெளிச்சத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் இனப்பெருக்கத்திறன் நன்கு இருக்க இவ்வொளி மிகவும் அவசியம். இயற்கை வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் செயற்கை பல்புகளைப் பொருத்துதல் நலம்.பொதுவாக 100 வாட்ஸ் குமிழி விளக்கு (பல்பு) அல்லது 40 வாட்ஸ் ஒளிரும் குழாய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இப்பல்புகளை 3 மீட்டர் இடைவெளி விட்டு தரையிலிருந்து 2 மீட்டர் தொலைவில் இருக்குமாறு 16 மணி நேரம் எரியுமாறு அமைத்தல் வேண்டும். இந்தப் பல்புகளை அடிக்கடி அனைத்துப் பின் போடக்கூடாது. காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை எரியுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி விளக்கை அணைத்துப் போடுவதால் அவை பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை அனைத்துப் போடுவதால் முயல்கள் பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. இளம் முயல்களுக்கு ஓரிரு மணி நேர வெளிச்சம் போதுமானது.
வெப்பநிலை

5 டிகிரி செல்சியஸ் இருந்து 33 டிகிரி செ வரை முயல்கள் வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. எனினும் முயலுக்கு உகந்த வெப்பநிலை அளவு 10 டிகிரி செல்சியஸ் – 26 டிகிரி செல்சியஸ். நமது இந்தியத் தட்பவெப்பநிலைக்கு முயல்கள் மிகவும் ஏற்றவை. சூடான காற்றை விட முயல்கள் குளிர்காற்றையே விரும்பும். எனினும் உயரமான மலைப்பகுதிகளில் இவைகள் வளர்வது இல்லை. கோடைகாலங்களில் சிறிது வெப்ப அழுத்தம் ஏற்படலாம். சரியான குளிர்ச்சியும், காற்றும் அளிப்பதால் இவ்வழுத்தத்தைத் தணிக்கலாம். வறட்சி ஏற்பட்டு அதனால் முயல்கள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். வயதான முயல்கள் தன் உடலை நீட்சிப்பதன் மூலம் வெப்பத்தை தாங்கிக் கொள்ளலாம்.இளம் முயல்களைத் தகுந்த முறையில் பாதுகாக்கவில்லையெனில் அவை வெப்பத்தைத் தாங்க இயலாமல் பாதிக்கப்படலாம்.

காடை வளர்ப்பு...காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்பட...
30/10/2014

காடை வளர்ப்பு...

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.

இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.

ஜப்பானியக் காடை இறைச்சி:

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.

ஜப்பானியக் காடை விற்பனை:

ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

காடை இனங்கள்:

நியூசிலாந்து காடை
பாப் வெள்ளைக் காடை
சைனாக் காடை
மடகாஸ்கர் காடை
கலிபோர்னியா காடை
நியூகினியா காடை
ஜப்பானிய காடை

Address

Chennai
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivasayam Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vivasayam Tamilnadu:

Share